அருள் தேகம்

ஆன்மா அருள் தேகம் எடுக்க வேண்டும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் தலைமை இடம் அருள் நிறைந்த அருட்பெருவெளி என்பதாகும் அந்த மாபெரும் பிரமாண்ட பெருவெளியில் அருள்சத்தி நிறைந்து இருக்கின்றது.
அந்த இடத்திற்கு கடவுள் சமூகம் என்று பெயர். 

அக்கடவுள் சமூகத்தில் ஆன்ம ஆகாயம் என்ற ஓர்இடம் உண்டு. அங்கு ஆன்மாக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றது.
ஒவ்வொரு ஆன்மாக்களும் சாதாரண சிற்றணு வடிவமான ஒளித்தன்மை உடையதாகும்.

பஞ்சபூத உலகம்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் பஞ்ச பூத உலகம் படைக்கப்படுகிறது.

எதற்காக என்றால்? 

ஆன்மாக்கள் ஜீவதேகம்  எடுப்பதற்கும் வாழ்வதற்கும் பஞ்சபூத உலகம் படைக்கப்படுகின்றன.

தேகம் இல்லாமல் பஞ்சபூத உலகத்திற்கு அனுப்பபட்ட ஆன்மாக்கள் வாழ்வதற்கு பஞ்சபூத அணுக்களைக்கொண்டு உடம்பு என்னும் வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது.
அவ்வுடம்பில் ஆன்மா வாழ்வதற்கு மாயா சக்தியால் உயிர் என்னும் சக்தி மிகுந்த ஒளிக் கருவி பொருத்தப்படுகிறது. உயிர் என்னும் ஒளிக் கருவி ஆன்மாவுடன்  இணைக்கப்படுகிறது. 

ஆன்மாவிற்கும்  உயிருக்கும் ஒரு ஒளி இணைப்பு கொடுக்கப்படுகிறது. அதன்பின் உயிருக்கும் உடம்பிற்கும் தொடர்பு கொடுக்கப்படுகிறது உடம்பில் உள்ள கருவிகள் இயங்குவதற்கு வெளியில் உள்ள காற்றை மூக்கின் வழியாக சுவாசித்து  பிராணவாயுவை எடுத்துக் கொண்டு அசுத்த காற்றை வெளியே தள்ளிவிடுகிறது.
பிராணவாயுவால் உடம்பு இயங்குகிறது.

உடம்பும் அதன் கருவிகளும் இயங்குவதற்கு வாதநாடி பித்தநாடி சுழுமுனைநாடி என்கின்ற மூன்று நாடி தேவைப்படுகிறது.
அதாவது காற்று. தண்ணீர்(இரத்தம்) வெப்பம் ஆகிய மூன்றும் ஒரே நரம்பின் வழியாக உடம்பு முழுவதும் செலுத்தப்படுகிறது.

உடம்பின் நான்கு பகுதிகளான இந்திரியங்கள்.
கரணங்கள்.ஜீவன்.ஆன்மா ஆகிய  நான்கிற்கும் அந்நரம்பின் வழியாக சமமாக இடைவிடாது செலுத்தி  இயங்க வைத்துவருகிறது.

ஜீவதேகம்:

ஆன்மா இயங்க முக்கியமானது உயிர். ஆதலால் இவ்வுடம்பிற்கு ஜீவதேகம் என்று பெயர் வழங்கப்படுகிறது.
உயிர் தன்னாட்சி செலுத்தி இயங்குகின்றவரை ஆண்டவர்  தொடர்பும் அருளும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

ஆன்மா ஜீவதேகத்தில் வாழ்ந்து கொண்டே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று அருள் தேகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்

ஆன்மா உயிர் உடம்பு!

உடம்பையும் உயிரையும் ஆன்மாவை விட்டு பிரிக்கவோ  அழிக்கவோ கூடாது அழித்தாலும் பிரித்தாலும் அதற்குப்பெயர் மரணம். மரணம் அடைந்தால் மீண்டும் பிறப்பு கட்டாயம் உண்டு

வள்ளலார் பாடல்!

இறந்தவரை எடுத்திடும் போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்

மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும் இதை நினைக்கில்நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர்

சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே

பிறந்த பிறப் பிதிற்றானே நித்திய மெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 

மரணம் வருவதற்கு காரணம் உடம்பு முதிர்ச்சி அடைந்து நரை திரை பிணி மூப்பு காரணமாக இருக்கின்றது. அதற்கு காரணமாக உள்ளது நாம் உண்ணும் உணவுமுறை வாழ்க்கைமுறையாகும்.

உணவு முறையும் வாழ்க்கை முறையையும் மாற்றி மரணம் வராமல் பாதுகாக்க  சிறந்த வழியைக் காட்டுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற மார்க்கமாகும்
உயர்ந்த பிறப்பான இந்த மனிதப்பிறப்பிலே நரை திரை பிணி மூப்பு மரணம் வராமல் பாதுகாத்து கொள்ளலாம் வாருங்கள் என ஆன்மநேயத்துடன் அன்புடன் அழைக்கிறார் வள்ளலார்

ஆன்மா வாழ்வதற்கு துணைக்கருவிகளாக சேர்த்து பின்னப்பட்டுள்ள உயிர் உடம்பின் அசுத்த பூதகாரிய அணுக்களை அழிக்காமல் சுத்த பூதகாரிய அணுக்களாக மாற்றி மேலும் மாற்று இவ்வளவு என்று சொல்லமுடியாத மாற்றுக்குறையாத சுத்த பசும்  பொன்னாக உடம்பை மாற்றிக்கொள்ள வேண்டும்* என்கிறார்

பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
என்னுளங் கலந்த என்றனி யன்பே! (அகவல்)

ஆன்மா அருள் தேகம் பெறுவதே மரணம் இல்லாப்  பெருவாழ்வு என்பதாகும்.

அருள் பெறும் வழிகளைப்பற்றி *பல ஞானிகள் பல வழிகளைக் காட்டியுள்ளார்கள். ஒருவர் கூட நேர்வழியைக் காட்டவில்லை.
எனவேதான் சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்மின் இங்கே என்கிறார் மேலும் பிறந்த இப்பிறவியிலே நித்திய மெய்வாழ்வு என்னும் பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் வந்திடுமின் என்கிறார்.

அருள் பெறுவதற்கு உளவு  ( இரகசியம்) ஒன்று உள்ளது அவற்றைத் தெரிந்து கொள்பவரே அறிவில் சிறந்த சன்மார்க்கியாவார் என்கிறார்.

உளவினில் அறிந்தால் லொழிய மற்று அளக்கின்
அளவினில் அளவா வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)

வள்ளலாரின் ஒழுக்கநிலை உண்மைநிலையை அறிந்து அருள்பெறும்  உளவை ஆண்டவரே காட்டியுள்ளார்.

பாடல்:

உள்ளானைக் கதவு திறந் துள்ளே காண
உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்

கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்

தள்ளானைக் கொலை புலையைத் தள்ளா தாரைத்
தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி

எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.!

கடவுளைக் காணாமல் அருள் பெறவே முடியாது. கடவுளைக் காணும்  உளவைக்  கண்டுபிடித்த ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவரே!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வள்ளலார் கண்டவுடன் ஆண்டவரே வந்து அருள் வழங்கி அருள் தேகம் கொடுத்து ஆட்கொண்டார்.

பாடல்!

மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்

பன்னுகின்ற தொழில்ஐந்துஞ் செய்திடவே பணித்துப்
பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே

உன்னுகின்ற தோறும் எனக் குள்ளமெலாம் இனித்தே
ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே

மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
மெய்யும்அணிந் தருள்வோய் என் பொய்யும்அணிந் தருளே.! 

மேலும்

தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்

எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
என்உயிரில் கலந்த நடத்திறையவர் 
காலையிலே

வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்

சந்தேகம் இல்லை என்றன் தனித்தலைவர் வார்த்தை
சத்தியம் சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வள்ளலார் தொடர்பு கொண்டதால் அருள்தேகம் அளித்து அவர் தேகத்தில் கலந்து பிரியாமல் வாழ்ந்துகொண்டு உள்ளார்.

நாம் எப்போது எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை அறிந்து தொடர்பு கொள்ளுங்கள்.

நாமும் வள்ளலார் காட்டிய உளவை அறிந்து தெரிந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள்தேகம் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896

Comments

Popular posts from this blog

பிறப்பு

Rotary on Differently abled

அட்டகம்