அட்டகம்
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
003. அருட்பெருஞ்சோதி அட்டகம்
003. அருட்பெருஞ்சோதி அட்டகம்
aruṭperuñjōthi aṭṭakam
- 1. அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
அருட்பெருந் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே. - 2. குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த
கோடிகோ டிகளும்ஆங் காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும்
மெய்யறி வானந்தம் விளங்க
அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே. - 3. கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
கருவினால் பகுதியின் கருவால்
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
விண்முதல் பரையால் பராபர அறிவால்
விளங்குவ தரிதென உணர்ந்தோர்
அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே. - 4. நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே
நண்ணியும் கண்ணுறா தந்தோ
திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
திரும்பின எனில்அதன் இயலை
இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
இசைத்திடு வேம்என நாவை
அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே. - 5. சுத்தவே தாந்த மவுனமோ அலது
சுத்தசித் தாந்தரா சியமோ
நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
புத்தமு தனைய சமரசத் ததுவோ
பொருள்இயல் அறிந்திலம் எனவே
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே. - 6. ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
இயற்கையோ செயற்கையோ சித்தோ
தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே. - 7. தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீதமேல் நிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே. - 8. எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
இதுஅது எனஉரைப் பரிதாய்த்
தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
புத்தமு தருத்திஎன் உளத்தே
அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
அருட்பெருஞ் சோதிஎன் அரசே
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
https://www.youtube.com/watch?v=dN59_zjeS9Y
https://www.youtube.com/watch?v=zj6uUAIWYEg
https://www.youtube.com/watch?v=rVQ8ytzE2Qs
Comments
Post a Comment